உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு பாப்பரசர் பிரான்சிஸினால் நிதியுதவி.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினால் வழங்கப்பட்ட மூன்றரை கோடி ரூபா பணத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பங்கின் ஊடகப் பணிப்பாளர் அருட்தந்தை கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி கலாநிதி பிரையன் உடைக்வா ஆண்டகையின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டனை வத்திக்கானுக்கு சென்றிருந்தபோது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு பரிசுத்த பாப்பரசரினால் ஒரு இலட்சம் யூரோக்கள் வழங்கப்பட்டதாக அருட்தந்தை கூறினார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கும் இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளதாக அருட்தந்தை கிருஷாந்த பெர்னாண்டோ கூறினார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கடந்த ஏப்ரல் மாதத்தில் வத்திகான் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.